கூவாகம் கூத்தாண்டவர் கோயில் வரலாறு

கூத்தாண்டவர் கோவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் என்ற பகுதியில் இருக்கும் இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்திரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மனதில் அரவானை நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வரலாறு கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கானது எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கான வரலாற்று கதையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். மகாபாரத போர் நடந்தது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த குருஷேத்திரப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் போருக்கு முன்னர் ஒரு உயிரை பலி கொடுக்கவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. பொதுவாக பலி கொடுக்கப்படும் எந்த உயிராக இருந்தாலும் பரிசுத்தமாகவும், சர்வ லட்சணமாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இப்படிப்பட்ட தகுதி உடையவர்களாக கிருஷ்ணரும், அர்ஜுனனும், அர்ஜுனனின் மகன் அரவானும் இருந்தார்கள். ஆனால் போருக்கு கிருஷ்ணரும், அர்ஜுனனும் மிகவும் முக்கியம். இதனால் அரவானை பலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.அரவான் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். ஆனால் தன்னை பலி கொடுப்பதற்கு முன்பு ஒரு பெண்ணை மணந்து கொண்டு ஒரு நாள் மட்டும் இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டும் என்றும், தன்னை பலி கொடுத்து விட்டாலும் குருஷேத்திரப் போரை பார்க்க வேண்டும்மென்றும், பூலோகத்தில் கோவில் கட்டி தன்னை வழிபட வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை வைத்தான். மற்ற இரண்டு கோரிக்கைகள் பரவாயில்லை. ஆனால் ஒரு நாள் மட்டும் சுமங்கலியாக வாழ்ந்து தன் கணவனை இழக்க எந்த பெண்தான் ஒத்துக் கொள்வாள். அரவானை கட்டிக்கொள்ள எந்தப் பெண்ணும் முன்வரவில்லை.வேறுவழியில்லை. கிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணந்துகொண்டார். மோகினியும், அரவானும் ஒரு நாள் இல்லற வாழ்வும் வாழ்ந்து விட்டனர். பின்பு அரவான் பலி கொடுக்கப்பட்டான். கணவனை இழந்தால் நம் சம்பிரதாயப்படி விதவைக்கோலம் புரியவேண்டும். மோகினியும் விதவையானாள். இந்த இடத்தில் கிருஷ்ணர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதை அடிப்படையாகக் கொண்டுதான் திருநங்கைகளும் தங்களை கிருஷ்ணனின் அவதாரமான மோகினியாக கருதி தங்கள் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டு, மறுநாள் தாலி அறுக்கும் சடங்கை ஆண்டுதோறும் இந்த திருவிழாவில் நடத்தி வருகின்றார்கள். இந்த சடங்கானது, இந்த ஊர் மட்டுமல்லாமல், பல்வேறு ஊர்களில் இருக்கும் அனைத்து கூத்தாண்டவர் கோவில்களிலும் நடக்கும். குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடந்ததை வைத்து, இந்த திருவிழாவும் பதினெட்டு நாட்கள் விமரிசையாக நடத்தப்படுகிறது.செல்லும் வழி உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூவாகம். தரிசன நேரம்: காலை 06.30AM – 12.00PM மாலை 04.30PM – 09.00PMமுகவரி: அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில், கூவாகம், உளுந்தூர்பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம் 606 102.

3 Likes